கடந்த வாரம் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, “பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது.
உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போன்று ஆலயத்தை நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனை ஒன்றில் நடந்தது. அந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கே பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.
கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் மிகவும் முக்கியம். அவற்றிற்கு நிதியுதவி அளிப்போம்.” என்று கூறியிருந்தார்.