கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை கையாள்வதில் பிரதமர் மோடி சிறந்த தலைவர்

Spread the love

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை கையாள்வதில் பிரதமர் மோடி சிறந்த தலைவர் என ஒரு கருத்துக்கணிப்பு கூறி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணமாக உள்ளன.

இந்த தருணத்தில், மக்களின் நடத்தை, அணுகுமுறைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ‘எனார்மஸ் பிராண்ட்ஸ்’ சார்பில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் பல சுவாரசிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. முக்கியமாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடியை கையாள்வதில் மோடி சிறந்த தலைவர்; அவர் உலக தலைவராக திகழ்கிறார் என பலரும் பாராட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் பங்கு பெற்றவர்களில் 66 சதவீதம் பேர், கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாள்வதில் மோடி சிறப்பான தலைவர் என்றும், 64 சதவீதம் பேர் அவரை உலக தலைவராக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 42 சதவீதம் பேர், பொருளாதார ஆதாயங்களுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று சீனா முயற்சித்தது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இது சீனாவுக்கு எதிரான மக்களின் மனப்பாங்கை படம்பிடித்துக் காட்டுகிறது.

6 முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முக்கிய தகவல்கள் வருமாறு:-

* பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, மக்களின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

* சீனாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களை விட இந்தியாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விலை கொடுக்க தயார் என 47 சதவீத இந்திய மக்கள் தெரிவித்துள்ளனர். சீன பொருட்கள் விலை மலிவாக இருந்தாலும்கூட, உலகளவிலான உற்பத்தியாளராக சீனா தன்னை நிலைநிறுத்துவதற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்றும் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* 55-65 வயதான முதியோர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது 47 சதவீதம் அதிகரித்துள்ளது. பால், மளிகைப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் பணம் செலுத்தி, வாங்குவதில் ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.

* 10 ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள் ஆன்லைன் வங்கி பண பரிமாற்ற நடவடிக்கையை ஊக்குவித்து வந்தாலும்கூட, ஒரே மாதத்தில் (கடந்த மாதத்தில்) 28 சதவீதம் பேர் முதன்முதலாக ஆன்லைன் வங்கி பண பரிமாற்ற முறைக்கு வந்துள்ளனர். 33 சதவீதம்பேர் 35-50 வயது பிரிவினர் ஆவர்.

* ஊரடங்கால் 74 சதவீதம் பேர் தாங்கள் தினந்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை தவற விட்டு இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். அதே நேரத்தில், மீண்டும் அந்தப் பழக்கத்தை தொடர காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 29 சதவீதம் பேர் ஆன்லைனில் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர்.

* இந்தியா வர்த்தகத்துக்கு ஏற்ற நாடாக மாறும் என 58 சதவீதம்பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* இன்னும் ஓராண்டு காலத்தில் பங்குச்சந்தை எழுச்சி பெறும். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை எட்டிப்பிடிக்கும் என 44 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் 2 ஆண்டுகளுக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்றும் கூறுகின்றனர்.

* இணையதளம் வழியாக வழங்கப்படுகிற ஓ.டி.டி. சேவையை விட டெலிவிஷன்தான் மக்களிடையே வரவேற்பை பெற்று மின்னுகிறது. உயர் வருவாய் பிரிவினர் 43 சதவீதம்பேர் தங்களது முக்கிய பொழுதுபோக்கு கேபிள் டி.வி.தான் என கூறி இருக்கிறார்கள். டி.வி. பார்க்கும் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் செய்தி சேனல்களில் நேரம் செலவிடுகின்றனர். 43 சதவீதம் பேர், செய்தி சேனல்கள் ஒருபக்கம் சார்பான செய்தி தருவதில்லை என கூறி உள்ளனர். 27 சதவீதம் பேர் சில செய்தி சேனல்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

‘எனார்மஸ் பிராண்ட்ஸ்’ நிர்வாக பங்குதாரர் அஜய் வர்மா இந்த கருத்துக்கணிப்பு குறித்து குறிப்பிடும்போது, “உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டின் இளைய சமூகத்தினர் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர். கொரோனா வைரஸ் முழு உலகையும் ஊரடங்கின் கீழ் கொண்டு வந்திருந்தாலும்கூட, இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுச்சி அடையும் என்ற உயர்ந்த நம்பிக்கை நம் குடும்பங்களில் காணப்படுகிறது” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page