புதுடில்லி: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பொறுப்பேற்றார்.
உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவில், 34 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். இக்குழுவின் தலைவராக, ஜப்பானைச் சேர்ந்த, ஹிரோகி நகாடனியின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து, புதிய தலைவராக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான தீர்மானத்தை, 194 நாடுகள் அடங்கிய, உலக சுகாதார சபை அங்கீகரித்தது. இதையடுத்து, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின் செயற்குழு கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாகநடந்தது. இதில், செயற்குழு தலைவராக ஹர்ஷ் வர்த்தன் பொறுப்பேற்றார்.
பின், ஹர்ஷ் வர்த்தன் பேசுகையில், ”உலகளவில், கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலியானவர்களுக்கு, என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ”இந்த வைரசை ஒழிக்க, உலக நாடுகள், ஒருங்கிணைந்து போராட வேண்டியது அவசியம். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், இந்தியா எடுத்துள்ளது,” என்றார். இந்தக் குழு, ஆண்டுக்கு இரண்டு முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு, இந்தக் குழு பரிந்துரை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது