சென்னை : ‘அம்பான்’ புயல், கரை கடந்த நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தட்பவெப்ப நிலை, மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.
புயல் உருவாகும் போது, தென் மாநிலங்களில் ஏற்பட்ட, வறண்ட வானிலை காரணமாக, பல இடங்களில், ஐந்து நாட்களாக வெப்ப காற்று வீசுகிறது.அதனால், தமிழக வட மாவட்டங்களுக்கு, இன்றும், வறண்ட வானிலை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, பெரம்பலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று வெப்ப அலையுடன் கூடிய காற்று வீசும்.
தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் துாத்துக்குடி ஆகிய, 10 மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில், அதிகபட்சம், 42; குறைந்தபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.