சென்னை,
தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையை தொட்டு உள்ளது. தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், உயிரிழப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 49 உயிர்களை கொரோனா பறித்து உள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 500 தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று 942 ஆண்கள், 573 பெண்கள் என 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும் உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,438 பேர் நேற்று பூரண குணம் அடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 20 ஆயிரத்து 706 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 40 பேர் பலி
தமிழகத்தில் நேற்று 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களில் 46 பேருக்கு கொரோனாவுடன் மற்ற நோய் பாதிப்புகளும் இருந்து உள்ளது. 3 பேர் கொரோனாவுக்கு மட்டும் உயிரிழந்து உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையில் 22 வயது இளம்பெண் உட்பட 40 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 3 பேரும்,
மதுரை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆகவும், தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.
32 மாவட்டங்களில்…
தமிழகத்தில் நேற்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 919 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும், ராணிப்பேட்டையில் 76 பேரும், திருவண்ணாமலையில் 65 பேரும், திருவள்ளூரில் 52 பேரும், காஞ்சீபுரத்தில் 47 பேரும், நாகப்பட்டினத்தில் 43 பேரும், மதுரையில் 20 பேரும், ராமநாதபுரம், நெல்லை, விழுப்புரத்தில் தலா 18 பேரும், வேலூரில் 16 பேரும், திருச்சி, திண்டுக்கலில் தலா 14 பேரும், தென்காசியில் 13 பேரும், கடலூரில் 11 பேரும், திருவாரூரில் 10 பேரும், விருதுநகரில் 8 பேரும், கள்ளக்குறிச்சியில் 7 பேரும், கன்னியாகுமரியில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், தேனி, தஞ்சாவூர், அரியலூரில் தலா 4 பேரும், நாமக்கலில் 3 பேரும், சிவகங்கை, பெரம்பலூர், தர்மபுரி, கோவையில் தலா 2 பேரும், கரூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
19 ஆயிரத்து 242 மாதிரிகள்
தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 19 ஆயிரத்து 242 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.