ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குமாமோட்டோ மற்றும் ககோஷிமா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

டோக்கியோ,
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குமாமோட்டோ மற்றும் ககோஷிமா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அந்த மாகாணங்களில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2 மாகாணங்களிலும் உள்ள பெரும்பாலான நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.2 மாகாணங்களிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நிலச்சரிவில் சிக்கியும் இதுவரை 16 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 14 பேர் மாயமாகியுள்ளனர் அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதனிடையே அடுத்த சில தினங்களுக்கும் குமாமோட்டோ மற்றும் ககோஷிமா மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அந்த 2 மாகாணங்களிலும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார்.