அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கினால் வெளிநாட்டு மாணவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்1, எம்1 போன்ற விசாக்கள் வழங்கப்படுகிறது.
சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சீனாவில் இருந்து 4 லட்சத்து 78 ஆயிரத்து 732 மாணவர்களும் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 290 மாணவர்களும் கல்வி விசாவில் அமெரிக்காவுக்கு சென்றதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை கொரோனாவைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் பயின்றுவரும் மற்றும் அமெரிக்கா செல்ல விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நடப்பாண்டு கல்வி குறித்து குழப்பத்தில் உள்ளனர்.
இதனிடையே 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியுரிமைத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலைக்கழக வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி இல்லை. குறிப்பாக முழுவதும் ஆன்லைனில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் எப்1, எம்1 விசாக்கள் மூலம் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டாது.
தற்போது அமெரிக்காவில் இத்தகைய பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டு பயின்று வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
மாணவர்கள் சட்டபூர்வமான நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கி இருக்க விரும்பினால் ஆன்லைன் அல்லாத பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், அவர் களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவது மட்டுமின்றி குடியேற்றம் ரீதியிலான விளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடும். மேலும் நடப்பாண்டு ஆன்லைன் கல்விக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வழங்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைக்கழகங்கள் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறியுள்ள நிலையில் குடியுரிமை துறையின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்தும் விதமாக அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் கல்வியாளர்கள் மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய மற்றும் கொடூரமான நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.